கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்..
கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையும், மார்ச்மாதம் 1ஆம் 2 ஆம் திகதிகளிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பப்படிவங்களை நாடு முழுவதிலுமுள்ள கீழ்வரும் 18 மத்திய நிலையங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த விண்ணப்ப படிவங்கள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன அதேவேளை, பரீட்சை கட்டணமாக 24 அமெரிக்க டொலர்கள் அல்லது இலங்கை நாணயத்தில் 3,772 ரூபாவை செலுத்தவேண்டும்.
இந்த விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாணம், பதுளை, குருநாகல், கண்டி, இரத்தினபுரி, வவுனியா, மத்துகம, அம்பாறை, மட்டக்களப்பு, சிலாபம், தம்புள்ளை, காலி, பொலன்னறுவை, திருகோணமலை, தங்காலை, சாணபியச மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களிலுள்ள பிரதேச இலங்கை வேலைவாய்ப்பு பணியக பயிற்சி மத்திய நிலையங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பரீட்சை தயாரிப்பு மற்றும் நிர்மாணத்துறைக்காக நடத்தப்படவுள்ளன. இம்முறை கொரியமொழி தேர்ச்சி பரீட்சை கணனியில் இடம்பெறுவதுடன் நிர்மாணத்துறைக்கான பரீட்சை மார்ச் மாதம் 19ஆம் திகதி முதல் மே மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறும்.
தயாரிப்பு துறைக்கான பரீட்சை 24 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
18 வயதிற்கும் 39 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கையர்கள் இந்த பரீட்சைக்காக விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பத்தை நிரப்புவதற்கு விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டுடன் அதன் பிரதியும், 3.5 X 4.5 சென்ரிமீற்றர் அளவிலான 3 புகைப்படம் இருக்கவேண்டும்.
இந்த பரீட்சையில் சித்தியடையும் பரீட்சார்த்திகளின் பெயர்ப்பட்டியல் கொரியாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். இது இரண்டு வருடகாலத்திற்கு செல்லுபடியானதாகும்.
இது கொரியாவின் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில் அமைச்சிற்கும் (MOEL) இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்குமிடையில் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.
Comments
Post a Comment